Tuesday, 7 February 2023

நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட துருக்கி, சிரியாவிற்கு நன்கொடை!- கூகுள் & ஆப்பிள் அறிவிப்பு

ஆப்பிள் சிஇஓ டிம் குக் மற்றும் கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை ஆகிய இருவரும், கோரமான நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள துருக்கி, சிரியாவிற்கு தங்களது இரங்கலை தெரிவித்துள்ளதோடு, நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் மற்றும் மீட்பு நடவடிக்கைகளுக்கு இரு நிறுவனங்களும் நன்கொடை அளிப்பதாக அறிவித்துள்ளனர்.

துருக்கியில் நேற்று (திங்கள்கிழமை) அடுத்தடுத்து ஏற்பட்ட 3 சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள், அந்நாட்டை நிலைகுலையச் செய்துள்ளது. இதுவரை 4000-க்கும் மேற்பட்ட உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. துருக்கியில் இடிந்து விழுந்த 5,606 கட்டடங்களில் குடியிருப்பாளர்கள் நிறைந்த பல மாடி அடுக்குமாடி கட்டிடங்களும் அடங்கும். நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதி, துருக்கி - சிரியா எல்லை அருகே அமைந்துள்ளது. அதனால் துருக்கி, சிரியா என இரண்டு நாடுகளுமே நிலநடுக்கத்தால் மிக கோரமான பாதிப்பை சந்தித்துள்ளன. சிரியாவை விட துருக்கியில் உயிரிழப்பு அதிகமாக இருப்பதாகக் கூறப்படுகிறது. பலர் இன்னமும் இடிபாடுகளில் சிக்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த நிலநடுக்கம் காரணமாக துருக்கியில் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

image

7.8 ரிக்டர் அளவில் ராட்சத நிலநடுக்கம் அதிகாலை நேரத்தில் முதல் நிலநடுக்கமாக ஏற்பட்டது. அதன் பிறகு பிற்பகலில் 7.5 ரிக்டர் அளவில் இரண்டாவது நிலநடுக்கம் ஏற்பட்டு இரு நாட்டையும் நிலைகுலையச் செய்தது, அதோடு நின்றுவிடும் என்று நினைத்தால் இயற்கை தன் கோரத்தாண்டவமாக 6 ரிக்டர் அளவில் 3-ஆவது நிலநடுக்கத்தையும் ஏற்படுத்தியது. மக்கள் வீடுகளை விட்டு வெளியேறும் முன்பே அவர்கள் மீது கட்டிடங்கள் விழுந்துள்ளன. வெளியே ஓட்டம் பிடித்தவர்கள் வீதிகளில் தஞ்சமடைந்தனர்.

image

மேலும் துருக்கியில் ஏற்பட்ட நிலநடுக்கம் கிரீன்லாந்து வரை உணரப்பட்டதாக புவியியல் ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. அடுத்தடுத்த நிலநடுக்கத்தால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். தற்போது, மீட்புக் குழுவினர் உயிர் பிழைத்தவர்களைத் தேடி அயராது உழைத்து வருகின்றனர். பல்வேறு உலகநாடுகள் நிவாரணம் மற்றும் மீட்பு நடவடிக்கைகளுக்காக உபகரணங்கள் மற்றும் குழுக்களை துருக்கி மற்றும் சிரியாவிற்கு அனுப்பி வைத்துள்ளன. இந்தியாவின் தரப்பில் தனது முதல் தொகுதி நிவாரணப் பொருட்கள் மற்றும் NDRF குழுக்கள் இன்று துருக்கிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

image

இந்தியாவின் தரப்பில் இருந்து, “ 50க்கும் மேற்பட்ட பயணிகளுடன் முதல் இந்திய C17 விமானம், NDRFதேடல் மற்றும் மீட்புப் பணியாளர்கள், சிறப்புப் பயிற்சி பெற்ற நாய் படைகள், துளையிடும் இயந்திரங்கள், நிவாரணப் பொருட்கள், மருந்துகள் மற்றும் பிற தேவையான உபகரணங்கள் துருக்கிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இரண்டாவது விமானமும் தற்போது புறப்படத் தயாராக இருக்கிறது” என்று இந்திய வெளியுறவு அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ செய்தித் தொடர்பாளர் ட்வீட் செய்துள்ளார்.

image

தற்போது ரஷ்யாவுடன் போரில் ஈடுபட்டு வரும் உக்ரைனும், துருக்கி மற்றும் சிரியாவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தங்களது ஆதரவை அறிவித்துள்ளது. " உக்ரைன் மீட்புப் பணியாளர்களை கொண்ட ஒரு பெரிய குழுவை, துருக்கிக்கு அனுப்பத் தயாராக உள்ளது. துருக்கி மீட்பு படையுடன் ஒருங்கிணைந்து செயல்பட நாங்கள் நெருக்கமாக பணியாற்றி வருகிறோம்" என்று உக்ரைனின் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும் ரஷ்யா, அமெரிக்கா, தென் கொரியா உள்ளிட்ட பல நாடுகளும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ, நிவாரண நடவடிக்கைகளை அறிவித்துள்ளன.

இந்நிலையில் தொழில்நுட்ப நிறுவனங்களான கூகுள் மற்றும் ஆப்பிள் நிறுவனங்களின் சிஇஒ-க்கள் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வருத்தங்களை தெரிவித்து, மீட்பு நடவடிக்கை மற்றும் நிவாரணத்திற்கு நன்கொடைகள் வழங்கி பக்கபலமாக இருப்போம் என ஆதரவு தெரிவித்துள்ளனர்.

ஆப்பிள் நிறுவன சிஇஒ டிம் குக், “ துருக்கி மற்றும் சிரியாவில் கோரமான பேரழிவு பூகம்பங்களால் பாதிக்கப்பட்ட ஒவ்வொருவருக்கும் எங்கள் எண்ணங்களையும், இரங்கலையும் கூறிக்கொள்கிறோம். ஆப்பிள் நிறுவனம் நிவாரணம் மற்றும் மீட்பு நடவடிக்கைகளுக்கு நன்கொடை அளிக்கும்” என்று தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

கூகுள் நிறுவன சிஇஒ சுந்தர் பிச்சை, “ துருக்கி மற்றும் சிரியாவில் நிலநடுக்கத்தால் அனைத்தையும் இழந்து தவிக்கும் மக்களை நினைத்து பார்க்கிறேன். பாதிப்புள்ளானவர்களுக்கு அவரசத்தகவலை வழங்க SOS அலெர்ட்டை செயல்படுத்தியுள்ளோம். கூகுள் மற்றும் கூகுளார்கள் நிவாரணம் மற்றும் மீட்பு நடவடிக்கைக்கு ஆதரவு அளிப்பார்கள்” என்று டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/657acGe
via IFTTT

No comments:

Post a Comment