Thursday, 16 February 2023

400 கோடி ஒளி ஆண்டு தொலைவில் இருக்கும் 50,000+ கேலக்ஸிகளை படம்பிடித்த ஜேம்ஸ்வெப் டெலஸ்கோப்!

நம்ப முடியவில்லை ஆனாலும் உண்மை, பாண்டோரா கிளஸ்டர் என அழைக்கப்படும் கேலக்ஸி மண்டலத்தை படம் எடுத்து, நம்பவேமுடியாத ஒரு அதிசயத்தை மீண்டும் நிகழ்த்தி காட்டி பிரம்மிக்க வைத்துள்ளது நாசாவின் ஜேம்ஸ்வெப் டெலஸ்கோப்.

நாசா வெளியிட்டிருக்கும் தகவலின் படி, Abell 2744 என அழைக்கப்படும் பாண்டோரா கிளஸ்டரை ஜேம்ஸ் வெப் டெலஸ்கோப் முதல் முறையாக படம் எடுத்துள்ளது. பாண்டோரா கிளஸ்டர் என அழைக்கப்படும் கேலக்ஸி மண்டலமானது, பூமியிலிருந்து சுமார் 400 கோடி ஒளி ஆண்டுகள் தொலைவில் இருப்பதாகும். இதற்கு முன்பு ”ஹப்பில் டெலஸ்கோப்” பான்டோரா கிளஸ்டரை படம் எடுத்த போதிலும், ”ஜேம்ஸ் வெப் டெலஸ்கோப்” எடுத்த அகச்சிவப்பு படத்தில் நம்ப முடியாத அளவிற்கு பல்வேறு கேலக்ஸிகள் வெளிப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

image

பாண்டோரா கிளஸ்டரில் மூன்று வெவ்வேறு கேலக்ஸி மண்டலங்களை ஒன்றிணைத்து படம் வெளியிடப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் மட்டும் சுமார் 50,000 க்கும் மேற்பட்ட கேலக்ஸிக்களின் ஒளிக்கீற்று பெறப்பட்டுள்ளதாக நாசா தெரிவித்துள்ளது. அதாவது நமது சூரிய குடும்பம், பால்வழி அண்டம் எனும் கேலக்ஸியில் இருக்கிறது. நமது பால் வழி அண்டம் போல, ஐம்பதாயிரம் கேலக்ஸிகள் நாசாவின் ஜேம்ஸ் வெப் எடுத்த படத்தில் வெளிப்பட்டுள்ளதாக தெரிகிறது.

image

30 மணி நேரத்திற்கும் மேலாக வானில் பான்டோரா கேலக்ஸி இருக்கும் பகுதியை குவியப்படுத்தி இந்த படம் எடுக்கப்பட்டுள்ளதாகவும், இதில் "கிராவிடேட்சனல் லென்சிங்" எனப்படும் ஈர்ப்பு குவியம் தெரிவதாகவும் விஞ்ஞானிகள் கூறுகின்றனர். இதன் மூலம் பாண்டோரா கிளஸ்டர் 400 கோடி ஒளியாண்டுகள் தொலைவில் இருந்தாலும், அதற்கு பின்பு இருக்கும் கேலக்ஸிகளும் வெளிப்படும் வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது பேரண்டம் தோன்றி சில நூறு கோடி ஒளியாண்டுகளில் தோன்றிய கேலக்ஸிகள் வெளிப்பட வாய்ப்புள்ளதாகவும், ஜேம்ஸ் வெப் எடுத்த புகைப்படத்தின் உதவியுடன் பான்டோரா கிளஸ்டர் குறித்து, மேலும் பல தகவல்களை பெற்று வருவதாக நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/vCb1LU4
via IFTTT

No comments:

Post a Comment