தேசிய தொழில்நுட்ப கழகங்களிலேயே முதன்முறையாக திருச்சி தேசிய தொழில்நுட்பக்கழகத்தில் 19 கோடி மதிப்பீட்டில் பரம்பொருள் சூப்பர் கம்ப்யூட்டிங் சென்டர் அமைக்கப்பட்டுள்ளது.
தேசிய தொழில்நுட்ப கழகம் திருச்சிராப்பள்ளி, NSM உள்கட்டமைப்பு குழுவிடம் சமர்ப்பித்த முன்மொழிவின் அடிப்படையில் மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் மற்றும் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை ஆகியவற்றால் 19 கோடி மதிப்பிலான அதிநவீன உயர் செயல்திறன் அமைப்பு கொண்ட சூப்பர் கம்ப்யூட்டிங் சென்டர் அமைக்கப்பட்டுள்ளது. இதற்கு ’பரம்பொருள் சூப்பர் கம்ப்யூட்டிங் சென்டர்’ என பெயர் சூட்டப்பட்டுள்ளது.
இதன்மூலம் வானிலை, பருவநிலை மாறுபாடு, இயற்கை சீற்றங்கள், சுற்றுச்சூழல், பொறியியல், தொழிநுட்பம் உள்ளிட்ட துறைகள் தொடர்பான ஆராய்ச்சிப் படிப்புகளை மாணவர்கள் அதிநவீன செயல்திறன் கொண்ட கணினி வசதிகளுடன் பெற முடியும். தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களில் உயர் செயல்திறன் கணினி இயந்திரங்கள் அமைத்து, ஆராய்ச்சி மற்றும் அதிக கணினி பயன்பாடு தேவைப்படும் பயன்பாடுகளுக்கு அளிப்பதே இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.
70:30 என்ற விகிதத்தில் CPU மற்றும் GPU ஐ உள்ளடக்கிய 650 TF சூப்பர் கம்ப்யூட்டர், புனேவிலுள்ள CDAC ஆல், 4 கோடி கூடுதல் செலவில் நிறுவப்பட்டுள்ளது. செயற்கை நுண்ணறிவு, இயந்திர கற்றல், ஆழ்ந்த கற்றல் உள்ளிட்ட சமூக திட்டங்களின் வளர்ச்சி அதிகரித்துவரும் நிலையில், திருச்சியில் உள்ள தேசிய தொழில்நுட்ப கழகத்தில் நிறுவப்பட்டுள்ள சூப்பர் கம்ப்யூட்டர் சென்டர், பல்வேறு ஆராய்ச்சி மற்றும் உதவி ஆராய்ச்சிகளை மேற்கொள்வதற்காக உயர்நிலை கணினி சம்பந்தப்பட்ட திட்டங்களில் பணிபுரியும் ஆராய்ச்சி அறிஞர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு மிகவும் உதவிகரமாக இருக்கும்.
பரம்பொருள் சூப்பர் கம்ப்யூட்டிங் சென்டரை திருச்சி தேசிய தொழில்நுட்பக் கழகத்தின் இயக்குநர் அகிலா முன்னிலையில், தேசிய தொழில்நுட்ப கழக நிர்வாகக் குழுவின் தலைவர் பாஸ்கர் பட் ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்தார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய திருச்சி தேசிய தொழில்நுட்பக்கழக நிர்வாக குழு தலைவர் பாஸ்கர் பட்,
தேசிய தொழில்நுட்ப கழகங்களிலேயே முதன்முறையாக திருச்சி தேசிய தொழில்நுட்பக் கழகத்தில் அதிநவீன செயல்திறன் மற்றும் சேமிப்புத் திறன் கொண்ட சூப்பர் கம்ப்யூட்டர் சென்டர் நிறுவப்பட்டுள்ளதாகவும், முற்றிலுமாக இந்தியாவில் தயாரிக்கப்பட்ட இதன் அமைப்புகள் திருச்சி தேசிய தொழில்நுட்பக்கழகத்தில் இனிவரும் காலங்களில் வானிலை, சுற்றுச்சூழல், தொழில்நுட்பம், பொறியியல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் ஆராய்ச்சி மேற்கொள்பவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என தெரிவித்தார்.
இது குறித்து பேசிய திருச்சி தேசிய தொழில்நுட்பக் கழகத்தின் இயக்குநர் அகிலா, திருச்சி தேசிய தொழில்நுட்ப கழகம் மட்டுமல்லாது, சுற்றியுள்ள பொறியியல் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி படிப்புகள் மேற்கொள்பவர்களும் இதனை பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும், இது குறித்த விவரங்கள் ஒவ்வொரு கல்லூரிகளுக்கும் சுற்றறிக்கையாக அனுப்ப திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்தார். மேலும் மத்திய அரசின் நிதியுடன் செயல்படுத்தப்பட்டுள்ள இத்திட்டத்தின் மூலம் அதிநவீன தொழில்நுட்ப வசதியுடன் மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் தங்களுடைய ஆராய்ச்சிப் படிப்புகளை மேற்கொள்ள முடியும் எனத் தெரிவித்தார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/cyKZmUn
via IFTTT
No comments:
Post a Comment