Tuesday, 13 July 2021

ஜியோ Vs ஏர்டெல் Vs வோடஃபோன் - ஐடியா... சந்தாதாரர்களை ஈர்ப்பதில் டாப் யார்?

இந்திய டெலிகாம் துறையில் மூன்று முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனங்கள் இடையே கடுமையான போட்டி நிலவி வருகிறது. சமீபத்திய தரவுகளின்படி, சந்தாதாரர்களை வசப்படுத்துவதில் ஜியோ முன்னிலை வகித்துள்ளது.

இந்திய டெலிகாம் துறையில் ஜியோ நுழைந்த பிறகு தொழில் போட்டிகள் அதிகமாகிவிட்டது. கடந்த 2016-இல் டெலிகாம் துறையில் நுழைந்த ஜியோ பெருவாரியான வாடிக்கையாளர்களை பெற்றதுதான் அதற்கு காரணம். இதனால் மற்ற டெலிகாம் நிறுவனங்கள் நஷ்டத்தை சந்திக்க வேண்டிய சூழலை எதிர்கொண்டன. இதன்பின் மற்ற நிறுவனங்களும் ஜியோவுக்கு இணையாக அதிரடி ஆபர்களை வழங்கத் தொடங்கின.

இதற்கிடையே, தொலைத்தொடர்பு நிறுவனங்கள் குறித்து இந்திய தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (டிராய்) அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில், ரிலையன்ஸ் ஜியோ Vs ஏர்டெல் Vs வோடபோன் - ஐடியா இடையேயான தொழில் போட்டி கடுமையாக இருப்பது தெரியவருகிறது.

இந்தியாவின் மிகப் பெரிய தொலைத்தொடர்பு ஆபரேட்டரான ரிலையன்ஸ் ஜியோ ஏப்ரல் மாதத்தில் 4.7 மில்லியன் பயனர்களைப் பெற்று சந்தாதாரர்களைச் சேர்ப்பதில் சந்தையில் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறது. இதற்கடுத்த இடத்தில் பார்தி ஏர்டெல் உள்ளது. இந்த நிறுவனம் 0.51 மில்லியன் சந்தாதாரர்களை புதிதாக இணைத்துள்ளது. அதேநேரத்தில், வோடபோன் ஐடியா 1.8 மில்லியன் வாடிக்கையாளர்களை இழந்ததுள்ளது என்று அந்த அறிக்கை தெரிவிக்கிறது.

image

ரிலையன்ஸ் ஜியோ: ஏப்ரல் மாதத்தில் 4.7 மில்லியன் பயனர்களை இணைத்ததால், ரிலையன்ஸ் ஜியோவின் மொத்த சந்தாதாரர்களின் எண்ணிக்கை 427.6 மில்லியனாக உயர்ந்துள்ளது.

பாரதி ஏர்டெல்: ஏப்ரல் மாதத்தில் 0.51 மில்லியன் வாடிக்கையாளர்களை சேர்த்ததால் மொத்த சந்தாதாரர்களின் எண்ணிக்கை 352.9 மில்லியனாக உயர்ந்தது.

வோடபோன் - ஐடியா: ஏப்ரல் மாதத்தில் 1.8 மில்லியன் பயனர்களை இழந்ததால், அதன் சந்தாதாரர்களின் எண்ணிக்கை 281.9 மில்லியனாக சரிவை கண்டுள்ளது.

இந்தியாவில் மொத்த தொலைபேசி சந்தாதாரர்களின் எண்ணிக்கையில் கடந்த ஏப்ரல் மாதம் ஓரளவு வளர்ச்சி பதிவாகியுள்ளது. இதன் காரணமாக ஏப்ரல் மாத இறுதி கணக்குப்படி இந்தியாவின் மொத்த சந்தாதாரர்களின் எண்ணிக்கை 1,203.4 மில்லியனாக உயர்ந்தது. இது மார்ச் மாதத்தை விட 0.19 சதவீதம் அதிகமாகும். இதேபோல், இந்தியாவில் பிராட்பேண்ட் சந்தாதாரர்களின் மொத்த எண்ணிக்கையானது ஏப்ரல் மாத இறுதியில் மொத்தம் 782.86 மில்லியனாக வளர்ச்சி கண்டுள்ளது.

இது மார்ச் மாதத்தை விட 0.61 சதவீதம் அதிகம் ஆகும். ரிலையன்ஸ் ஜியோ இன்ஃபோகாம் 430.47 மில்லியன், பாரதி ஏர்டெல் 194.18 மில்லியன், வோடபோன் - ஐடியா 122.54 மில்லியன், பி.எஸ்.என்.எல் 24.52 மில்லியன், அட்ரியா கன்வர்ஜென்ஸ் 1.87 மில்லியன் என முறையே இந்த ஐந்து முன்னணி டெலிகாம் நிறுவனங்கள் மொத்த பிராட்பேண்ட் சந்தாதாரர்களில் 98.8 சதவீத சந்தாதார்களை கொண்டுள்ளன.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/3kdvALq
via IFTTT

No comments:

Post a Comment